
ஈரோடு மாவட்டத்திலுள்ள வாய்க்கால் மேடு பகுதியில் சீராளன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இன்ஜினியரிங் பட்டதாரியான பிரவீன் என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு 35 வயது ஆகும் நிலையில் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவர் பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஊருக்கு வந்துள்ளார். ஆனால் அவர் மீண்டும் பெங்களூருக்கு செல்லாமல் வீட்டில் இருந்தபடியே வேலை செய்துள்ளார். இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படும் நிலையில் சரிவர யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவ நாளில் பிரவீன் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் அதன் பிறகு அவர் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் தேடிப் பார்த்தபோது அந்தப் பகுதியில் உள்ள ஒரு கிணற்றின் அருகே அவரின் செருப்புகள் இருப்பது தெரிய வந்தது.
இதனால் அவர் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பெயரில் உறவினர்கள் காவல்துறையினருக்கும் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணிநேர போராட்டத்திற்கு பிறகு பிரவீனை சடலமாக மீட்டனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திருமணம் ஆகாததால் மன வேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.