
ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஐபிஎல் 2025 சீசனின் 47வது போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி தனது அதிரடி ஆட்டத்தால் ரசிகர்களையும் கிரிக்கெட் உலகையும் வியக்க வைத்தார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வைபவ், தன்னுடைய முதல் பந்திலேயே ஆபத்தான பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவை சிக்ஸருடன் வரவேற்றார். இஷாந்தின் ஒரே ஓவரில் 28 ரன்கள் குவித்த அவர், தனது இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
— akash singh (@akashsingh17654) April 28, 2025
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நான்காவது ஓவரில் களமிறங்கிய இஷாந்த் சர்மாவின் பந்துகளை வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக எதிர்கொண்டார். முதல்பந்தை டீப் ஸ்கொயர் லெக்கில் சிக்ஸருக்காக எறிந்த அவர், அடுத்த பந்தையும் டீப் மிட்விக்கெட் மீது சிக்ஸராக மாற்றினார். மூன்றாவது பந்தில் பவுண்டரி, ஐந்தாவது பந்தில் சிக்ஸர் என சுழற்றிய வைபவ், ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்து இஷாந்தை மிரளவைத்தார். இந்நிகழ்வு சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல பரவி, வைபவ் மீது பாராட்டு குவிந்து வருகிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக, 14 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது ஐபிஎல் வாழ்க்கையின் முதலாவது சதத்தை மிக அதிவேகமாக பதிவு செய்தார். 35 பந்துகளில் ஏழு பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்களுடன் சதத்தை கடந்த வைபவ், ஐபிஎல் வரலாற்றில் அதிவேக சதம் அடித்த முதல் இந்திய வீரராகப் பெயர் பெற்றார். 11.5வது ஓவரில் பிரசித் கிருஷ்ணாவின் பந்தில் அவுட்டான வைபவ், யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்து 166 ரன்கள் என்ற அதிரடியான முதல் விக்கெட் கூட்டணியை அமைத்தார். இளம் வயதிலும் வெளிப்படுத்திய ஆட்ட திறமை, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.