
மகாராஷ்டிராவில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதி விதர்பா. இந்த பகுதியில் வறட்சியின் காரணமாக விவசாயிகள் அடிக்கடி தற்கொலை செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இவருடைய தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுனர். இந்த பெண்மணி அகில இந்திய அளவில் 142 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்த சாதனையை பெற்ற பெண்ணின் பெயர் அதீப் அனாம்.
இவர் தனது தந்தையின் ஊக்குவிப்பு மூலம் இந்த சாதனையை அடைந்ததாக செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது, “பெண்கள் உயர் கல்வி கற்க கூடாது என சமூகம் கூறும் பட்சத்தில் அதைப்பற்றி கவலை கொள்ளாமல் உன்னுடைய இலக்கில் மட்டுமே கவனம் செலுத்தி வெற்றியை அடைய வேண்டும்” என்று என் தந்தை என்னிடம் அடிக்கடி கூறுவார் என்று தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்த முதல் முஸ்லிம் பெண்மணி இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.