மதுரை துரை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வந்த தனியார் “கிண்டர் கார்டன்” மழலையர் பள்ளியில் நடைபெற்ற கோடைகால பயிற்சி வகுப்பில், 4 வயது சிறுமி ஆருத்ரா தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த துயர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி பின்புறம் பாதுகாப்பின்றி இருந்த 12 அடி ஆழமுள்ள தொட்டியில் சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்ததும் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும், சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, அனுமதியின்றி செயல்பட்ட பள்ளியின் தாளாளர் திவ்யா உட்பட 5 பேரை அண்ணாநகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பள்ளியை வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் மூடி சீல் வைத்துள்ளனர். உயிரிழந்த சிறுமியின் தந்தை, “மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக மட்டும் தெரிவித்தனர், உயிரிழப்பு குறித்து பள்ளி நிர்வாகம் எந்த தகவலும் வழங்கவில்லை” என்று வேதனையுடன் கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.