பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் கடும் பதிலடிக்கு பதிலாக பாகிஸ்தான் சைபர் போரில் ஈடுபடத் தொடங்கியுள்ளது. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட IOK ஹேக்கர் குழு, ஸ்ரீநகர் மற்றும் ராணிக்கேத்தில் உள்ள ராணுவப் பள்ளிகள், ராணுவ நலவீட்டுத் திட்டம், விமானப்படை வேலைவாய்ப்பு போர்டல் போன்ற தன்னாட்சி இணையதளங்களை ஹேக் செய்ய முயற்சி செய்தது. கடந்த இரண்டு நாட்களில் இந்த முயற்சிகள் நிகழ்ந்ததாகவும், இவை எந்தவொரு முக்கிய ராணுவ வலையமைப்போடும் நேரடியாக இணைக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்த முயற்சி தெரிய வந்த உடனே, இந்தியாவின் சைபர் பாதுகாப்பு அமைப்புகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டன. பாகிஸ்தானை மையமாகக் கொண்ட இந்தஹேக்கர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இணையதளங்களின் உணர்திறன் மற்றும் செயல்பாடு பாதிக்கப்படாததை உறுதி செய்ய நுட்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்கால சைபர் தாக்குதல்களைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேநேரம், ராஜஸ்தான் மாநில கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமும் பாகிஸ்தான் ஆதரவு ஹேக்கர்களால் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகப்புப் பக்கத்தில் “பஹல்காம் தாக்குதல் இல்லை” என்ற கருத்துடன் கூடிய போஸ்டர் பதிவேற்றப்பட்டது. இணையதளம் உடனடியாக முடக்கப்பட்டு, மீட்டெடுக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கல்வி அமைச்சர் மதன் திலாவர், சைபர் பாதுகாப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா எடுத்து வரும் பல அதிரடி நடவடிக்கைகளால் பாகிஸ்தான் இப்படி சைபர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.