
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் காரணமாக, இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் நாட்டினரை உடனடியாக நாடு கடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டு, பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் தங்களது தாயகத்திற்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் விளைவாக, இந்தியர்களை திருமணம் செய்து பல ஆண்டுகளாக இந்தியாவில் குடும்பமாக வாழ்ந்து வந்த பாகிஸ்தானிய பெண்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் பிரிந்து செல்லும் கடும் நிலைமை உருவாகியுள்ளது. இந்த விவகாரத்தில், கருணை அடிப்படையில் செயல்படுமாறு மத்திய அரசை ஜம்மு – காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் கணக்கில் கருத்து தெரிவித்து அவர் கூறியதாவது,
“இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்களை நாடு கடத்தும் மத்திய அரசின் திட்டம், மனிதாபிமான நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலம் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்டு குடும்பமாக வாழ்ந்து வந்த பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதனால் பெரும் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அவர்களை குடும்பங்களில் இருந்து பிரிக்கக் கூடாது. எனவே, மத்திய அரசு இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.
குறிப்பிடத்தக்கது என்னவென்றால், கடந்த 2013-ம் ஆண்டு, ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தலைமையில், பாகிஸ்தானில் இருந்து திரும்பிய முன்னாள் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை குடியமர்த்தும் வகையில் ஒரு மறுவாழ்வு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் கீழ், பல பாகிஸ்தானிய பெண்கள் ஜம்மு – காஷ்மீரில் வாழ்க்கையை தொடங்கினர்.
தற்போது, புதிய மத்திய அரசின் உத்தரவு அவர்களின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதையும், மனிதாபிமானக் கோணத்தில் இந்த முடிவை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமென மெஹபூபா முஃப்தி வலியுறுத்துகிறார்.