அமெரிக்க நாட்டில், இந்த வருடம் தொடங்கி மூன்றே நாட்களில் நாடு முழுக்க நடந்த துப்பாக்கி சூடு தாக்குதல்களில் 130 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நாட்டில் சமீப வருடங்களாக துப்பாக்கி சூடு கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்நாட்டில் துப்பாக்கி சூடு தாக்குதல்கள் நடக்காத நாள் இல்லை என்ற அளவிற்கு மோசமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் இந்த வருடம் தொடங்கப்பட்ட மூன்றே நாட்களில் நாடு முழுக்க நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதல்களில் 130-க்கும் மேற்பட்டோர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் நடக்கும் துப்பாக்கிசூடு தாக்குதல்களை கண்காணிப்பதற்காக இருக்கும் துப்பாக்கி வன்முறை ஆவண காப்பகம் என்னும் இயக்கம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. அந்த இயக்கம் கடந்த செவ்வாய்கிழமை அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இந்த வருட தொடக்கத்திலிருந்து குழந்தைகள் இருவர் மற்றும் சிறுவர்கள் 11 பேர் உட்பட 131 பேர் வேண்டுமென்றோ, தெரியாமலோ துப்பாக்கியால் இறந்திருக்கிறார்கள். மேலும், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட சுமார் 113 பேர் காயமடைந்திருக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கிறது.