
காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து இந்திய ஒற்றுமை நடைப்பயணம் என்ற பெயரில் பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இந்த பாதயாத்திரை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசியக்கொடி அசைத்து தொடங்கி வைத்த நிலையில், தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, ராஜஸ்தான் என பல மாநிலங்களை கடந்து தற்போது ராகுலின் நடைபயணம் ஹரியானாவை அடைந்துள்ளது. இந்நிலையில் ஹரியானாவில் நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி அங்கு நடைபெற்ற ஒரு பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.
டி-ஷர்ட் அணிவது எதற்காக என்பது குறித்து ராகுல் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, மத்திய பிரதேசத்தில் ஒற்றுமை நடைப்பயணம் மேற்கொண்ட போது 3 ஏழை சிறுமிகள் கந்தலான உடை அணிந்து கொண்டு என்னிடம் ஓடி வந்தனர். நான் அவர்களை தொட்ட போது சிறுமிகள் குளிரில் நடுங்கி கொண்டிருப்பதை உணர்ந்தேன். நானும் அப்படி குளிரில் நடுங்கும் வரை டி-ஷர்ட் மட்டுமே அணிவேன் என அப்போது முடிவு செய்தேன். டி-ஷர்ட் மூலமாக அந்த வலியை நான் வெளிப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பாஜக கட்சியினர் ராகுல் காந்தி விலை உயர்ந்த டி-ஷர்ட் அணிந்திருப்பதால் தான் அவருக்கு மட்டும் குளிர வில்லை என்று விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.