திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையம் அருகே ராமர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் அருகே ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள குளம் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த 20 வருடங்களுக்கு முன்பு புனித தீர்த்தமாகவும், இந்த பகுதி மக்கள் எந்த காலத்திலும் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு முக்கிய குளமாக  இது இருந்து வந்தது.

இந்த குளத்தில் தண்ணீர் அதிகம் இருக்கும்போதுதான் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் கைப்பம்புகளுக்கு தண்ணீர் வரும். தற்போது இந்த குளம் பராமரிக்கப்படாத காரணத்தினால் செடி, கொடிகள் மற்றும் ஆகாய தாமரை வளர்ந்து புதர் போல் மண்டி கிடக்கிறது. இந்த குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் குப்பை கொட்டப்படுவதனால் இந்த தண்ணீர் கழிவு நீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கோவில் குளத்தை சுத்தம் செய்து பொதுமக்கள் பயன்படுத்தும் விதமாக சீரமைக்கப்பட வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.