
இமயமலை பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும் மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்படலாம் என்று தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனமானது (NGRI) நேற்று (பிப்,.21) கணித்து உள்ளது. NGRI எனும் புவியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் என்.பூர்ணச்சந்திர ராவ் கூறியதாவது, இந்திய தட்டு வருடந்தோறும் தோராயமாக 5 செ.மீ நகர்கிறது. இதன் காரணமாக இமயமலையில் அழுத்தம் உருவாகிறது என அவர் கூறினார்.
பூமியின் மேற்பரப்பு தொடர்ச்சியாக இயக்கத்தில் உள்ள பல தட்டுக்களால் ஆனது என்பது கவனிக்கத்தக்கது. நிலநடுக்கம் (அ) பூகம்பம் என்பது பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு பூமியின் தட்டுகள் நகர்வதனால் இடம்பெறும் அதிர்வைக் குறிக்கும். ஹிமாச்சலபிரதேசம் மற்றும் நேபாளத்தின் மேற்கு பகுதிக்கு இடையில் உள்ள நிலஅதிர்வு இடைவெளி என குறிப்பிடப்படும் இந்த பகுதியில் உத்தரகாண்ட் உள்பட எந்நேரத்திலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என டாக்டர் என பூர்ணச்சந்திர ராவ் கூறினார்.