மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வசித்து வருபவர் ஓவிய ஆசிரியர் தங்கராஜ் பாண்டியன். இவர் அஞ்சல் அட்டையை மக்கள் மீண்டுமாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அடிப்படையில் அஞ்சல் அட்டைகளில் திருவிளையாடல் புராண ஓவியங்களை தீட்டி உள்ளார். சுமார் 64 அஞ்சல் அட்டைகளில் சிவபெருமானின் திருவிளையாடல்களை காட்சிப்படுத்தி கண்கவரும் ஓவியங்களை வரைந்துள்ளார் தங்கராஜ்.

இப்போது நவீன தொழில்நுட்பம் காரணமாக அனைத்தும் கணினி மயமாகிவிட்டது. காகிதம் இன்றி டிஜிட்டல் முறையில் தகவல் பரிமாற்றம் நடைபெற்று வருகிறது. தற்போதும் தபால் நிலையங்களில் அஞ்சல் அட்டைகளானது விற்பனை செய்யப்படுகிறது. எனினும் முன்பு போல் மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.

ஆகவே மக்கள் மீண்டும் அஞ்சல் அட்டைகளை பயன்படுத்த வேண்டும் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அடிப்படையில் முதற்கட்டமாக அஞ்சல் அட்டைகளில் சிவ பெருமானின் 64 திருவிளையாடல்களை குறிக்கும் விதமாக படங்களை வரைந்துள்ளார் தங்கராஜ். அதனை தொடர்ந்து பல நூல்களில் இடம்பெற்றுள்ள அரிய கருத்துக்களை அனைவரும் அறிந்துகொள்ளும் அடிப்படையில் அஞ்சல் அட்டையில் ஓவியமாக வரையவுள்ளேன் என அவர் கூறினார்.