ஈரோடு மாவட்டத்தில் உள்ள பட்டரமங்கலம் பகுதியில் கந்தசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துக்குமார்(22) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் முத்துக்குமார் தனது நண்பர்களான ராம்குமார், பிரனேஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் புங்கார் சின்ன பண்ணாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருமண விழா முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ராஜன் நகர் மொக்கை என்ற இடத்தில் சென்றபோது அவ்வழியாக வந்த லாரியும், முத்துக்குமார் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்துக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற இரண்டு பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான பிரசாந்த் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.