
ஆடி மாதங்களில் கோவில் திருவிழாக்கள் கலை கட்டும். இந்நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் நீராடி செல்லவது வழக்கம். ஆனால் தற்போது காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கிறது. அதனால் ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் அ.தி பரஞ்சோதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்கு கீழ் காவேரி ஆற்றின் அருகில் அமைந்திருக்கும் திருக்கோயில்களில் வெள்ள அபாய எச்சரிக்கையின் காரணமாக பக்தர்கள் ஆற்றில் குளிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி ஈரோடு மாவட்டம் பவானி அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில், வீரநாராயணப் பெருமாள் திருக்கோயில், காங்கேயம்பாளையம் அருள்மிகு நட்டாட்ரீஸ்வரர் திருக்கோவில், அம்மாபேட்டை அருள்மிகு சொக்கநாதசுவாமி திருக்கோவில், ஊஞ்சலூர் அருள்மிகு மாரியம்மன், செல்லாண்டியம்மன், பாசூர் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், நஞ்சை கிளாம்பாடி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் ஆகிய கோவில்களில் பக்தர்கள் ஆற்றில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.