கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்தவர் ராஜன். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் அபிலாஷ்(18). இவர் ஆத்தூர் அருகே உள்ள தனியார் பாராமெடிக்கல் கல்லூரியில் அறுவை சிகிச்சை உதவியாளர் படிப்பு பயின்று வந்தார். நேற்று அபிலாஷ் ஊரில் உள்ள அணைக்கு தனியாக குளிக்க சென்றுள்ளார்.

அப்போது பயங்கரமாக இடி மின்னலுடன் மழை பெய்தது. மாலை நேரத்தில் குளிக்க சென்ற அபிலாஷ் இரவு 7 மணி வரை வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் இரவில் அணைக்கு குளிக்க சென்றவர்கள் 4 அடி ஆழத்தில் அபிலாசின் சடலம் கிடைப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து  காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் அபிலாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அபிலாஷ் மின்னல் பாய்ந்து இறந்து இருப்பாரா அல்லது நீரில் மூழ்கி இறந்திருப்பாரா என்பது குறித்து பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே தெரியவரும் என போலீசார் கூறினர். இதனை தொடர்ந்து அபிலாஷ் மிகச் சிறந்த கபடி வீரர் எனவும் அவருக்கு நன்கு நீச்சல் தெரியும் எனவும் கூறப்படுகிறது.