மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள திகம்கர் மாவட்டத்தில் படகாவ் தசான் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த பல மாதங்களாக 45 வயதுடைய ஒரு நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். அதனால் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இந்நிலையில் சிறுமியின் 5 மாத கர்ப்பத்தை கலைப்பதற்காக, சிறுமியின் தாயார் தவறான முறையில் மருந்துகள் கொடுத்துள்ளார். அதனால் சிறுமிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது.

இதுகுறித்து அறிந்த சிறுமியின் ஊனமுற்ற தந்தை கிராமத்தலைவரின் உதவியுடன் சிறுமியை ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்ட பின் சிறுமி நிலை மிக மோசமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு அவசரமாக கருக்கலைப்பு செய்து சிறுமியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

தற்போது சிறுமி பொது பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்த 45 வயது நபர் தனது ஊனமுற்ற இயலாமையை தெரிந்து தனது குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி தனது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அதனால் கர்ப்பமான தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல விடாமல் தடுத்து வீட்டிலேயே தவறான மருந்துகளை கொடுத்து கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்தார்.

இதனால் யாருக்கும் தெரியாமல் கிராம தலைவரின் உதவியுடன் தனது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றியதாக ஊனமுற்ற தந்தை தெரிவித்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியின் தாயாரும் இக்குற்றத்தில் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

அதாவது கருக்கலைக்க தவறான மருந்துகளை சிறுமிக்கு அவரது தாயார் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தாயையும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாகிய  நபரையும் கைது செய்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.