தேனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர்  சித்த வைத்தியர்  ராமநாதன் (63). இவர் செய்தித்தாளில் மணமகள் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த விளம்பரத்தை பார்த்த கீர்த்தி(55) என்ற பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராமநாதனை நம்ப வைத்துள்ளார்.

அதன் பின் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. இதையடுத்து நேற்று திருமணத்திற்கு தேவையான தாலி, மெட்டி போன்ற நகைகளை வாங்க திநகரில் உள்ள பிரபல நகை கடையில் ராமநாதன், கீர்த்தி இருவரும் சென்றுள்ளனர். அங்கு நகைகளை வாங்கி ராமநாதன், கீர்த்தியிடம் கொடுத்துள்ளார். அதன் பின் கீர்த்தி தனது உறவினர் ஒருவருக்கு உடல்நலம் சரியில்லாத காரணத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  இருப்பதாக கூறி ராமநாதனை அழைத்துச் சென்ற நிலையில் திடீரென கீர்த்தியை காணவில்லை.

இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராமநாதன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி இரண்டு கிராம் தங்கத்தாலி, அரைகிராம் மூக்குத்தி மற்றும் மெட்டி ஆகியவற்றை கீர்த்தி திருடிச் சென்றதாக புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன கீர்த்தியை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.