ராஜஸ்தான் மாநிலம் உதயபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் நடந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடாடா பகுதியில் உள்ள பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் பரீட்சை எழுதி கொண்டிருந்தபோது ஆசிரியர் ஒருவர் கோழியை வெட்டி சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது.

மோஹன்லால் டோடா என்ற ஆசிரியர், கோழியை வீட்டுக்கு கொண்டு செல்ல விரும்பியதால், மாணவரை பரீட்சையை விட்டு நடுவே எழுந்து அந்த வேலை செய்யச் சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து தெரிந்த உடனேயே, பகுதி மக்கள் அமைச்சர் பாபுலால் கராரியை சந்தித்து புகார் அளித்தனர். அதன்படி துணை கலெக்டர் ஹஸ்முக் குமாரிடம் விரிவான விசாரணை அறிக்கையை தயார் செய்ய உத்தரவிடப்பட்டது.

விசாரணை அறிக்கையில், ஒன்பதாம் வகுப்பு மாணவர் ராகுல்குமார் பார்கியை பரீட்சை நடுவே கோழி வெட்டி சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டன. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலர், மோஹன்லால் டோடாவை இடைநீக்கம் செய்துள்ளார்.

மேலும், இந்த ஆசிரியர் ஒரு மாதத்திற்கு முன்பு பள்ளி சமையல்காரரை வேலைநீக்கம் செய்ததால், குழந்தைகள் இந்த காலகட்டத்தில் மதிய உணவு இல்லாமல் அவதிப்பட்டுள்ளனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.