
தமிழ்நாடு அரசு அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசியல் சாசனப் பிரிவு 142-இன் படி சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி மசோதாவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மாநில அரசின் உதவி மற்றும் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 90 நாட்களுக்குள் அனைத்து வகை மசோதாக்கள் மீதும் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்.
பத்து மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்நிலையில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் இதுகுறித்து கூறியதாவது, ஆளுநரின் எதேச்சதிகாரப் போக்கிற்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இத்தீர்ப்பை தவெக மனதார வரவேற்கிறது. தமிழ்நாடு எப்போதும் மாநில உரிமைகள் காப்பதில், மாநில தன்னாட்சிக் கொள்கைகளை பேணுவதில் இந்திய ஒன்றியத்திற்கே முன்னோடி மாநிலம் என்பது உலகறிந்த ஒன்று என்று அவர் தெரிவித்துள்ளார்.