
தஞ்சை மாவட்டத்தில் உள்ள கஞ்சனூர் பகுதியில் வசித்து வந்தவர் சிவா. இவர் டொயோட்டோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதிக்கு வசூலிற்கு சென்றுள்ளார். அங்கே கோடாலி கிராமத்தில் வசித்து வரும் மகேஷ் என்பவர் டொயோட்டா காருக்கு 4 மாத தவணை ரூபாய் 52000 செலுத்தாமல் காலதாமதம் செய்து வந்துள்ளார். இதனால் அவரிடம் பணம் வசூலிக்க சிவா சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
இதனால் சிவாவின் குடும்பத்தினர் பந்தநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிவாவை தீவிரமாக தேடி வந்தனர். அப்போதுதான் அரியலூர் மாவட்டத்தில் கோடாலி கிராமத்தில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது. இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்பதற்காக சென்றபோது சடலம் முழுவதுமாக எரிந்த நிலையில் உடலின் சில கை, கால் போன்ற உதிரி பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனை கைப்பற்றி ஆய்வு செய்த போது கையில் இருந்த மோதிரத்தை வைத்து எரித்து கொலை செய்யப்பட்டவர் பைனான்ஸ் ஊழியர் சிவா என்பது தெரியவந்தது.
இதனை அடுத்து நடத்திய விசாரணையில் கடைசியாக சிவா, மகேஷ் என்பவரின் வீட்டிற்கு வசூலுக்கு சென்றதும் தெரிய வந்தது. இதனை அடுத்து மகேஷை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் குற்றவாளியான மகேஷ் கூறிய வாக்குமூலம் காவல்துறையினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதாவது, ஊழியர் சிவா, மகேஷின் வீட்டிற்கு சென்று தவணைத் தொகையை கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் மகேஷின் மனைவி விமலாவிடம் மிகவும் தவறான முறையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மகேஷ் அருகில் இருந்த பைபால் சிவாவை தாக்கியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே சிவா உயிரிழந்ததால் இந்த கொலையை மறைக்க மகேஷ் சிவாவின் உடலை இரவு நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கொண்டு சென்று ஊருக்கு வெளியே பனை மட்டைகளை வைத்து உடலை எரித்து உள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் சிவாவின் பைக்கை மீன் சுருட்டியை பகுதியைச் சேர்ந்த பைனான்சியர் சுரேஷ் என்பவரிடம் ரூபாய் 15000க்கு எந்த ஒரு ஆவணமும் இன்றி விற்றது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் மகேஷை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தவணை வசூலிக்க சென்ற ஊழியரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.