சீனாவில் முதுகலை பட்டதாரி பெண் மன நிம்மதிக்காக எடுத்த முடிவு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. அதாவது சீனாவில் உள்ள பீஜிங் பல்கலைக்கழகத்தில் பத்திரிக்கை துறையில் முதுகலை பட்டம் பெற்ற இளம் பெண் ஹுவாங்(26). இவர் பல ஊடக நிறுவனங்கள் மற்றும் இணையதள நிறுவனங்களில் உயர்ந்த சம்பளம் வாங்கும் பணியில் இருந்தார். ஆனால் அதிக சம்பளம் அளிக்கும் வேலை வாய்ப்புகளை விட்டுவிட்டு தற்போது அவர் பயின்ற பல்கலைக்கழகத்திலேயே கேண்டினில் ஊழியராக பணிபுரிகிறார்.

இதுகுறித்து ஹூவாங் கூறியதாவது, கடந்த 2022-ல் முதுகலை பட்டத்தை முடித்த பின், பிரபல ஊடக நிறுவனங்கள் மற்றும் இணையதள நிறுவனங்களில் பணியாற்றி வந்த அனுபவம் இருந்த போதிலும் அங்கு தொடர்ந்து குறிக்கோள்களை அடைய வேண்டிய மன அழுத்தம் மற்றும் வேலை நேரம் கடந்தும் அலுவலகப் பணி குறித்த எண்ணங்கள் ஆகியவை தனது மனநிலையை மிகவும் பாதித்துள்ளதாகவும், தொடர்ந்து மேலாளரின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது.

எனது பணி நேரத்திலும் பணி நேரத்துக்கு பிறகும் வேலை செய்து கொண்டிருப்பது போலவே தோன்றியது என அவர் கூறினார். மேலும், அந்த அலுவலகப் பணியை ஒப்பிடுகையில் உணவகத்தில் வேலை செய்வது மனநிம்மதியை தருவதாகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உணர்வதாக கூறினார்.

ஹுவாங்கின் பெற்றோர் நடுத்தர பின்புலத்தைக் கொண்டவர்கள். அவர்கள் இருவரும் பேருந்து ஓட்டும் தொழிலாளர்கள்.ஹுவாங்கின் இந்தத் தேர்வை அவரது பெற்றோர்கள் ஏற்க மறுத்தாலும் சமையலறை வேலை தனக்கு மகிழ்ச்சியையும் அமைதியும் தருவதாக ஹுவாங் கூறுகிறார். தற்போது ஹுவாங் மாதம் சுமார் 6000 யுவான் அதாவது இந்திய மதிப்பின்படி ரூபாய் 69, 300 வருமானம் பெற்றாலும் தனிப்பட்ட மகிழ்ச்சிக்காக இந்த வேலையை தேர்ந்தெடுத்ததாகவும் ஒரு நாள் உணவக மேலாளர் ஆக மாற வேண்டும் என்ற குறிக்கோளுடனும் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார்.