பெங்களூருவில் உள்ள ஒரு பகுதியில் ராகேஷ் கெத்தார் – கவுரி தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ராகேஷ் தனியார் நிறுவனத்தில் மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக மும்பையில் இருந்து பெங்களூருவிற்கு வந்த இந்த தம்பதிகள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் சம்பவ நாளில் மாலை நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து சந்தோசமாக பேசிக் கொண்டிருந்தனர்.

அதன் பிறகு இரவு நேரத்தில் சாப்பிட அமர்ந்த அவர்கள் பதிலுக்கு பதில் பாடல் பாடி விளையாடுவோம் என பேசிக் கொண்டனர். அதன்படி ராகேஷ் மது அருந்திக்கொண்டே பாட்டுகள் பாடினார். அப்போது கவுரி சமையலறையில் தனது கணவருக்காக சாதம் வைத்துக் கொண்டிருந்தபோது, கணவரின் குடும்பத்தை இழிவுபடுத்தும் விதமாக மராத்தி பாடல் ஒன்றை பாடினார். அதனை கேட்டு கோபமடைந்த ராகேஷ் தனது மனைவியை கீழே தள்ளிவிட்ட நிலையில் பதிலுக்கு கௌரி கத்தியை கொண்டு அவர் மீது வீசினார்.

அப்போது ராகேஷின் கோபம் உச்சகட்டம் அடைந்த நிலையில் அந்த கத்தியை கொண்டு தனது மனைவியின் கழுத்திலும் வயிற்றிலும் குத்தி அவரை கொலை செய்தார். பின்னர் மனைவியின் உடலை சவப் பெட்டியில் அடைத்து குளியலறை அருகே வைக்க முயன்ற போது அந்த பெட்டியின் கைப்பிடிகள் உடைந்து விட்டது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிய அவர் வீட்டை சுத்தம் செய்தார். இதைத்தொடர்ந்து மகாராஷ்டிராவில் உள்ள ஷிர்வால் என்ற பகுதிக்கு சென்று தலைமறைவாகிவிட்டார்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்த நிலையில் கவுரியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கடந்த ஏப்ரல் 2ம் தேதி தலைமறைவாகியிருந்த ராகேஷை அவர்கள் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கவுரி தனது குடும்பத்தை பற்றி மிகவும் அவதூறாக பேசியதால் கோபத்திலும், மன அழுத்தத்திலும் தனது மனைவியை கொன்றதாக கூறினார். இது தொடர்பாக காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.