
டெல்லி மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள வாசிர்பூர் JJ காலனியில், இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு, கொலைவெறியுடன் முடிந்துள்ளது. வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தில், 65 வயதான ராதே ஷ்யாம் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். மேலும், முகமது ஜமால் (44), அவரது மகன் முகமது இர்ஷாத் (20) உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் இரு குடும்பத்தினர் மீதும் கொலை, கொலை முயற்சி, கல்லெறி மற்றும் தாக்குதல் குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து ராதே ஷ்யாமின் மனைவி கமலா தேவி தெரிவித்ததாவது, “நாங்கள் இரண்டு முறை போலீசை அழைத்தோம். ஆனால் அவர்கள் எந்தவித உதவியும் செய்யவில்லை. அவர்கள் எங்களை மீது கல்லெறிந்தனர். என் கணவர் சண்டையை நிறுத்த சென்றபோது, இர்ஷாத் அவரை கத்தியால் குத்தினார். அப்போது எதுவும் செய்ய முடியாமல், நான் ஒரு கிலோமீட்டர் நடந்துபோய், ஒரு இருசக்கர வாகன ஓட்டுநரை மன்றாடி உதவி கேட்டேன். என் கணவரை காப்பாற்றியிருக்கலாம்,” என கூறினார்.
காலை நேரத்தில் இரு தரப்பினாலும் ஏற்பட்ட மோதல், போலீசாரால் சமாதானம் செய்யப்பட்டது. ஆனால் மாலையில் மீண்டும் தகராறு வெடித்து வன்முறை சம்பவமாகவே மாறியது. அடிக்கடி இந்த பகுதியில், சிறுவர்கள் இடையே ஏற்பட்ட சண்டை, பெரியவர்கள் தலையிடுவதன் மூலம் தீவிரமடைந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். கல்லெறியும், தாக்குதலும் பரபரப்பான சூழலை ஏற்படுத்தியது.
வழக்கை குறித்து டெல்லி வடமேற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (DCP) பீஷம் சிங் தெரிவித்ததாவது, “இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியது. இதில் ராதே ஷ்யாம் உயிரிழந்தார். மற்ற ஐந்து பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தொடர்ந்து சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.