நாமக்கல் மாவட்டம் காமராஜ் நகர் என்னும் பகுதியில் ரவிக்குமார்-சாலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ரவிக்குமார் என்பவர் பேட்டரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சாலா நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறையில் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே அருண்குமார் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இவர் நாமக்கல் திமுக எம்எல்ஏ ராமலிங்கம் என்பவரின் உறவினர் ஆவார். இந்நிலையில் அருண்குமார் தன்னுடைய வீட்டில் முன்னால் உள்ள வழிப்பாதையில் இருந்த புற்களை அகற்றி உள்ளார். பின்னர் அந்த குப்பைகளை ரவிக்குமார் வீட்டிற்கு முன் கொட்டியுள்ளார். இதனைக் கண்ட ரவிக்குமார் அவர்களிடம் சென்று கேட்டபோது அருண்குமார் வாக்குவாதம் செய்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களுக்குள் தகராறு முற்றிய நிலையில் அருண்குமாரும் அவரது இரு மகன்களும் சேர்ந்து ரவிக்குமாரையும் அவரது மனைவியையும் சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் மற்றும் அவரது மனைவி இருவரும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் இரு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மேலும் வருவாய்த்துறை ஆய்வாளர் மற்றும் அவரது கணவனை தாக்கிய குற்றத்திற்காக அருண்குமார் மற்றும் அவரது இரு மகன்களை காவல் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.