விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மரக்காணம் பகுதியில் சிறுகாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதவன் (53). இவர் விவசாய வேலை பார்த்து வருகிறார். கடந்த 17ஆம் தேதி அன்று மாதவன் மாடுகளை மேய்த்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். அங்கு காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக விவசாய நிலங்களை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டு இருந்தது. மாடுகளை கவனித்துக் கொண்டு சென்ற மாதவன் மின் வேலியில் மீது விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த மாதவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணையில் தெரிவித்ததாவது, சிறுவாடி கிராமத்தை சேர்ந்த ராஜகுமாரன் (25),அய்யனார் (34), கோதண்டராமன் (38) ஆகியோர் மின்வேலி அமைத்துள்ளனர். இவர்கள் மின்வேலி அமைத்து காட்டுப் பன்றிகளை பிடித்து விற்பனை செய்துள்ளனர். இதனை அடுத்து இந்த மூவரையும் வனத்துறை காவல் அதிகாரிகள் விலங்குகளை துன்புறுத்தும் வதை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் இந்த மூவரும் ஏற்கனவே காட்டுப்பன்றியை வேட்டையாடி விற்பனை செய்ததால் கைது செய்யப்பட்டு முன் ஜாமினில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.