
மெக்சிகோ நகரில் சான் பெட்ரோ சோலுவா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி காலை 7 மணி அளவில் அருகிலுள்ள விலங்குகள் பாதுகாப்பகத்தில் இருந்து சிங்கம் ஒன்று தப்பி சென்று உள்ளது. தப்பிச் சென்ற சில மணி நேரத்திலேயே அங்குள்ள தெருவில் சுற்றித் திரிந்துள்ளது. இதனை அந்த வழியாக காரில் சென்ற ஒரு நபர் கேமராவில் படம் பிடித்துள்ளார். சிறிது நேரம் தெருவில் நின்ற சிங்கம் அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தது.
சிங்கம் ஒன்று தப்பி சென்றதைத் தொடர்ந்து மேயர் அலுவலகத்தில் இருந்து உள்ளூர் மக்களுக்கு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. “சிங்கம் விரைவாக பிடிக்கப்படும். மேலும் அது எங்கிருந்து வந்தது என்பது குறித்த விசாரணைகள் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்துள்ளது. இதனை அடுத்து அங்குள்ள ocoyoacac என்ற நகரில் அமைந்துள்ள Racica animal foundation என்ற விலங்கு மீட்பு மையத்திலிருந்து தப்பியுள்ளது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அந்த மையத்தின் பணியாளர்கள் சிங்கத்தை பாதுகாப்பாக மீட்டு மீண்டும் அதனை தங்குமிடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த மீட்பு மையம் சட்ட விரோதமாக சிறைபிடிக்கப்படும் விலங்குகளை மீட்டு பாதுகாக்கும் மையமாகும். இதில் சிங்கங்கள், புலிகள், குரங்குகள், சிறுத்தைகள் போன்ற பல வகையான விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பல லட்சம் பார்வையாளர்களை கடந்து வருகிறது.