
மத்திய பிரதேசம் மாநிலம் ரீவா நகரில் வியாபாரி ஒருவர் தனது காதலியின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் ஹோட்டல் உரிமையாளரான விவேக் ஷுக்லா தனது காதலியை, காதலிக்கும் போது ரூ.80 லட்சம் செலவு செய்ததாக கூறினார். அவரின் காதலி பின்னர் உறவில் இருக்க மறுத்ததால் செலவான தொகையை திரும்ப பெற காவல் நிலையத்தை அணுகியுள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் விவேக்கின் குற்றச்சாட்டு உண்மை என்று தெரியவந்தது.
இதன் அடிப்படையில் அந்த பெண்ணுக்கு எதிராக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் தனது புகாரில் 22 லட்சம் பணம், ஐபோன், விலை உயர்ந்த கைக்கடிகாரம், காலணிகள், கைப்பைகள் உள்ளிட்ட பல பரிசுகளை வழங்கியதாகவும், அதற்கான வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் ரசீதுகளையும் காவல்துறையினருக்கு வழங்கியதாகவும் விவேக் தெரிவித்துள்ளார். விவேக் கடந்த 2023ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட முயற்சி செய்ததும், அதை வாபஸ் பெற்றதும் தெரியவந்தது.
இதற்கிடையில் முன்னாள் எம்எல்ஏ-வின் அண்ணன் மகளுடன் அவர் தொடர்பு வைத்துள்ளார். அந்தப் பெண் அவருக்கு அரசியலில் வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதன் மூலம் அவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் விவேக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவருக்கு எதிராக விசாரணை நடத்த கோரி உள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.