குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ஓதவ் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் விழா நிகழ்ச்சியில், பஜரங்க்தள மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரின் குழுவினர் திடீரென நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

மதமாற்றம் நடைபெற்று வருகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, கம்புகளை ஏந்தியபடி ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழங்கிய இந்தக் குழுவினர், விழாவில் கலந்து கொண்டவர்களை மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.

பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள் அந்த விழாவில் கலந்துகொண்டிருந்தனர். குழுவினர் திடீரென புகுந்து, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் மதம் என்னவென்று விசாரித்து, மதமாற்றம் நடப்பதாக குற்றம் சாட்டினர்.

 

தகவலறிந்து வந்த போலீசார், அவரகள் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை சமாதானப்படுத்தி, அவர்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற இம்மானுவேல் அமாய்தாஸ் என்பவர், 10–15 பேர் சட்டவிரோதமாக நுழைந்து அச்சுறுத்தியதாக புகார் அளித்தார்.

மேலும், பஜரங்க்தள உறுப்பினரான தர்ஷன் ஜோஷி மதமாற்றம் குறித்த விசாரணை வேண்டும் எனக் கூறி தனிப்புகார் அளித்துள்ளார். இரு புகார்களும் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் மதமாற்றம் நடந்ததாக எந்தவிதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை என ஓதவ் காவல் நிலைய ஆய்வாளர் பி.என். சின்சுவாடியா உறுதி செய்துள்ளார். “இது தொடர்பான விசாரணை தொடருகிறது” எனவும் அவர் கூறினார். இந்த சம்பவம் குஜராத்தத்தில் மதசார்ந்த பதட்டத்தை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.