மகாராஷ்டிரா மாநிலம், பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் மேற்கு ரயில்வேயின் முதன்மை கண்காணிப்பாளர் ஷைலேஷ் துபே மீது பயணி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துபே தனது வேலையை செய்துக்கொண்டிருந்தபோது, ஒருவர் அவரை அடித்ததாகவும், இது பணியிலுள்ள பயணச்சீட்டு பரிசோதகர் (TTE) முன்னிலையில் நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 18 அன்று, துபே தானே ரயில் நிலையத்தில் இருந்து பஞ்சாவதி எக்ஸ்பிரஸின் C2 பெட்டியில் ஏறினார்.

அங்கு இருந்த ஒரு பயணி, அவரிடம் பயணச்சீட்டை காண்பிக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. சாதாரண உடையில் இருந்த துபே, அவரிடம் நீங்கள் TTE ஆ? என்று கேட்டார். பயணி அதற்கு இல்லை என்று பதிலளிக்க, துபே தனது பயணச்சீட்டை TTEக்கும் மட்டுமே காண்பிப்பேன் என கூறினார். இதனால், MST (மாதாந்திர சீட்டு) பயணிகள் ஆத்திரமடைந்து, அவரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படும் பயணி ஷாந்தி துபே என்பவரை கண்டுபிடித்து விசாரணை செய்ய வேண்டும் என மேற்கு ரயில்வே அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேற்கு ரயில்வே, இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகாரை சத்திரபதி சிவாஜி மகாராஜ் முனையம் (CSMT) ரயில்வே காவல் நிலையம் பெற்றுக் கொண்டு, தானே ரயில்வே காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.