அமெரிக்காவில் நடுவானில் சென்று கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் விமான பணிப்பெண்ணை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் சவன்னா விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று புளோரிடாவுக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது. அப்போது அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த நிலையில் அதில் பயணித்த டெலாஞ்ச் அகஸ்டின்(31) என்ற பயணி அங்கிருந்த மற்றொரு நபருடன் சண்டை போட்டார்.

இதனை கண்ட பணிப்பெண்கள் அகஸ்டினை தட்டி கேட்டபோது அவர் அந்த பணிப்பெண்களையும் அடித்து தாக்கியுள்ளார். இதனால் விமானி கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். அவர்களிடம் அவசரமாக தரையிறங்க அனுமதி கேட்டார். இதைத் தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்ட நிலையில் விமானம் புறப்பட்ட சவன்னா விமான நிலையத்திற்கு மீண்டும் வந்து தரையிறங்கியது. அங்கு விமான நிலைய காவல்துறையினர் அகஸ்டினை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் விமானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.