சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரஷ்ணேவ் தாக்கல் செய்திருக்கும் பொதுநல வழக்கில் “தமிழகத்தில் தயாரிக்கப்படும் படங்கள் திரையிடப்படுவதற்கு முன்னதாக தணிக்கை வாரியத்தின் சான்றிதழ் பெறப்படுகிறது. “யு” என்ற சான்றிதழ் பொதுவான அனைத்து வயதினரும் கண்டுகளிக்கலாம், “ஏ” என்ற சான்றிதழ் வயது வந்தவா்களுக்கு மட்டும், “யுஏ” என்ற சான்றிதழ் 12 வயதுக்கு உள்பட்டவா்கள் பெற்றோரின் வழிகாட்டுதலின் படி காண்பது, “எஸ்” என்ற சான்றிதழ் குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் என வழங்கப்படுகிறது. எனினும் பல திரையரங்குகளில் வயது வந்தவா்களுக்கு மட்டும் என்ற சான்றிதழ் பெற்ற திரைப்படங்களை பார்க்க 18 வயது நிரம்பாதவா்களையும் அனுமதிக்கின்றனர்.

இதுபற்றி மத்திய திரைப்பட தணிக்கைத்துறை திரையரங்க உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. திரையிடுதல் சட்டத்தின் கீழ் இது போன்ற செயல்பாடுகள் குற்றம் ஆகும். திரையரங்குகளில் பணிபுரிபவா்கள் “ஏ” சான்றிதழ் படங்களை திரையிடும் போது 18 வயதுக்கு குறைந்தவா்களை அனுமதிக்கக்கூடாது. இது குறித்து மத்திய தணிக்கைத் துறையின் வழிகாட்டுதல்களை திரையரங்க உரிமையாளா்கள், திரைப்பட விநியோகஸ்தா்கள் ஆகியோர் கட்டாயம் கடைப்பிடிக்கும்படி உத்தரவிடவேண்டும். அதோடு இதுபற்றி தணிக்கைத்துறைக்கும், மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாடு துறைக்கும் நான் அனுப்பிய மனுவை பரிசீலிக்குமாறு உத்தரவிடவேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

இம்மனு தலைமை நீதிபதி(பொறுப்பு) டி.ராஜா, நீதிபதி பரத சக்கரவா்த்தி போன்றோர் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் மனுதாரா் பிரஷ்ணேவ் சாா்பாக ஆஜரான வழக்கறிஞர் வாதிடும் போது, காா்ட்டூன் படங்களை கூட 7 வயதுக்கு குறைவானவா்கள் பாா்க்ககூடாது என விதி இருக்கிறது. எனினும் தற்போது வீடுகளில் சிறுகுழந்தைகளும் அதை பாா்க்கிறாா்கள் என்று கூறினார். இதனை கேட்ட நீதிபதிகள், திரையிடப்படும் படம் 3 மாதங்களில் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படுகிறது. இதை எவ்வாறு சரிசெய்ய இயலும்? என கேள்வி எழுப்பினா். அதனை தொடா்ந்து மனுதாரரின் மனுவை பரிசீலனை செய்யும்படி மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறைக்கும், மத்திய திரைப்பட தணிக்கை துறைக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.