
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நகை கடை ஒன்று உள்ளது. இந்த நகை கடையில் பாதுகாப்பு காவலராக பிரமோத் பாண்டே (56) என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வேலை நேரத்தில் அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது கடையின் விற்பனையாளரான சஞ்சய் ஜாக்டாப் (49) என்பவர் அவரை புகைப்படம் எடுத்து வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டே மறுநாள் ஜாக்டாபுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், பாண்டே தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சஞ்சயின் கை மற்றும் உடலின் பிற பகுதிகளில் சுட்டார். இதில் காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாண்டேவை கைது செய்தனர். அதோடு அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.