
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அடுத்த சுண்ணாம்பு காளவாய் பகுதியில் வசித்து வந்தவர் முகமது அசாருதீன். இவர் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தனது பைக்கில் குனியமுத்தூர் பகுதியில் சாலையில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மற்றொரு வாகனத்தின் மீது இவரது பைக் உரசி உள்ளது.
இதனால் அந்த வாகன ஓட்டியான அசார் என்பவருக்கும், அசாருதீனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நேற்று இரவு இந்த சம்பவம் தொடர்பாக அசார் மற்றும் அவரது தரப்பினர்கள், அசாருதீனை தனியே பேசுவதற்காக அழைத்துள்ளனர். இதனால் அசாருதீன் தனது நண்பர்கள் 3 பேரை அழைத்துக் கொண்டு குனியமுத்தூர் டைமண்ட் அவென்யூ பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கு அசார் தனது நண்பர்கள் 10 பேருடன் வந்துள்ளார். இதை அடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இறுதியில் வாக்குவாதம் முற்றி மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அசாருதீனை, அசார் தரப்பினர் கத்தியால் சரமாரியாக வயிற்றில் குத்தியுள்ளனர்.
இதனால் அசாருதீன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த அசாருதீனை மீட்டு கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்க அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை அசாருதீன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இது தொடர்பாக குனியமுத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தகராறில் ஈடுபட்ட அசார், மன்சூர், சதாம், அப்பாஸ், சம்சுதீன், முகமது ரஃபிக் உள்ளிட்ட 6 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். சிறிய வாகன மோதல் கொலையாக மாறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.