உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாபுஜி கா புர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் ரூபேஷ்(34). இவர் அப்பகுதியில் பைக் ஏஜென்சி அருகே ஒரு தள்ளு வண்டியில் வாழைப்பழங்கள்,வெள்ளரி, சோளம் ஆகியவற்றை வியாபாரம் செய்பவர். இவர் வழக்கம் போல தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து கொண்டிருந்த போது ராய்பரேலி நோக்கி யாகூப் கஞ்ச் கிராமத்தைச் சேர்ந்த பிங்கூ என்ற இளைஞர் தனது பைக்கில் வேகமாக வந்ததால் பின்னிருந்து ரூபேஷை வேகமாக மோதினார்.

இதனால் ரூபேஷ் தனது தள்ளு வண்டியோடு சேர்ந்து வேகமாக சென்று தரையில் விழுந்துள்ளார். இது குறித்த காட்சிகள் அந்த பைக் ஏஜென்சியின் சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த விபத்தில் பைக் ஓட்டுனரான பிங்கூ பலத்த காயம் அடைந்துள்ளார். அவருடன் பைக்கில் வந்த மற்றொரு நபர் நொடியில் உயிர் பிழைத்தார்.

இந்த விபத்தை பார்த்த சிலர் உடனடியாக ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்தனர். அதன் பின் இருவரும் மகாராஜ்கஞ்ச் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன்பின் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.