
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கேத்தரின் என்ற மாணவி படித்து வந்துள்ளார். இவர் தனது காதலனுடன் இருசக்கர வாகனத்தில் சென்னை கடற்கரை சாலையில் இருந்து, ஓஎம்ஆர் சாலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிராக வந்த இருசக்கர வாகனம் சாலையின் விதியை மீறி அதிக அளவில் இடது புறம் வந்துள்ளது. இதனால் அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வலது பக்கத்தில் இவர்கள் சிறிது நகர்ந்த போது, பின்னால் இருந்து வந்த கழிவு நீர் லாரி அவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறிய இவர்கள் இருவரும் சாலையில் விழுந்தனர். இந்நிலையில் கல்லூரி மாணவியின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் லாரியின் ஓட்டுநரை கைது செய்தனர். அதன் பின்பு மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.