சேலம் மாவட்டத்தில் உள்ள ஆலமரத்துக்கு காடு பகுதியில் சோலையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் டிராக்டர் மூலம் உழுது கொண்டிருந்தார். அப்போது வயலில் நடுப்பகுதியில் திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டு டிராக்டரின் சக்கரம் சிக்கியது. உடனடியாக சோலையப்பன் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் டிராக்டரை அப்புறப்படுத்தினார்.

இதனையடுத்து நிலத்தடியில் அறை போன்ற பள்ளம் இருப்பதை கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அங்கு பழங்கால பொருட்கள் இருக்கலாம் என்ற தகவல் பரவியதும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். மேலும் சிலர் இது பழங்காலத்தில் தானியங்களை கொட்டி வைக்க பயன்படுத்திய தானியக் குழியாக இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.