சென்னை மாவட்டத்தில் உள்ள புதுவண்ணாரப்பேட்டை திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் நிலையம் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் சாலையில் சுமார் 7 அடி ஆழத்தில் திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த தண்டையார்பேட்டை மண்டல குழு தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் போக்குவரத்து போலீசார் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சுற்றி இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்தனர். அதன்பிறகு போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டனர்.

இதனையடுத்து பள்ளத்தை சரி செய்யும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது, கழிவுநீர் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் விழுந்துள்ளது. பள்ளம் ஏற்பட்ட நேரம் எந்த வாகனமும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது என கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.