திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்னவரிக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர் சுதாகர் மற்றும் தற்காலிக ஆசிரியராக பணியாற்றும் அவரது மனைவி ஆகியோர், தங்கள் திருமண நாளை பள்ளியில் கேக் வெட்டி மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கொண்டாடினர்.

இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியை சரோஜினி மற்றும் பிற ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுதாகர், தனது சமூக வலைதளமான முகநூலில் இதற்கான புகைப்படங்களையும் வீடியோவையும் பகிர்ந்திருந்தார்.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவியதையடுத்து, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் மலைவாசன் தலைமையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில், பள்ளி வளாகத்தில் இதுபோன்ற தனிப்பட்ட நிகழ்வை நடத்துவது கல்வி ஒழுங்கின்மையை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் பின்னணியில், தலைமை ஆசிரியை சரோஜினி அவர்களை வெங்கிளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யும் உத்தரவும், ஆசிரியர் சுதாகருக்கு உதயேந்திரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு இடமாற்றம் செய்யும் உத்தரவும் மாவட்ட கல்வி அலுவலரால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.