
தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞருக்கு கடந்த ஒரு மாதமாக தொடர்ச்சியான இருமல் மற்றும் எடையிழப்பு காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. கடந்த 10 நாட்களில் நிலைமை மேலும் மோசமடைந்து, நன்றாக உறங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவர்களை அணுகியபோது, CT scan மூலம் நுரையீரலின் கீழ் பகுதியில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
உடனே மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். முதலில் அவரது நுரையீரலில் ஓர் அடைப்பு காரணமாக இருமல் இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதினர். இதையடுத்து மீண்டும் பரிசோதனை செய்ததில், அவரது நுரையீரலில் வேற ஏதோ ஒரு பொருள் இருப்பதை கண்டறிந்தனர். அறுவை சிகிச்சையின் நடுப்பகுதியில், மருத்துவர் நோயாளியின் மூத்த சகோதரரை அழைத்து, குழந்தைப் பருவத்தில் ஏதேனும் பொருளை அவர் விழுங்கியிருக்கிறாரா எனக் கேட்டார். அப்போது அவரது சகோதரர், அவர் 5 வயதில் பேனா மூடியை தவறுதலாக விழுங்கியதாக கூறினார்.
மூன்று மணிநேரம் நீடித்த அறுவை சிகிச்சைக்கு பின், நுரையீரலில் இருந்த பேனா மூடியை வெளியேற்றினர். நீண்ட காலமாக இருந்த பொருள், நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தாலும், எதிர்ப்பு மருந்துகளின் மூலம் மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரிசெய்தனர். தற்போது நோயாளி முழுமையாக குணமாகிவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதியளித்துள்ளனர்.