
மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சௌர் மாவட்டத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் காணாமல் போன 35 வயதான லலிதா பாய் என்ற பெண், லாரி விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்டார். அந்த விபத்தில் நசுங்கிய பெண்மணி ஒருவரின், கையில் இருந்த டாட்டூ மற்றும் காலில் இருந்த கருப்பு கயிற்றை வைத்து அவரது தந்தை லலிதா என அடையாளம் காண்பித்து, இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இது கொலை வழக்காக மாறி, நான்கு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஆனால், 18 மாதங்கள் கழித்து, 2025 மார்ச் 11ஆம் தேதி, லலிதா பாய் திடீரென வீட்டுக்கு திரும்பி வந்தார். அவரை உயிரோடு பார்த்த குடும்பத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்தனர். அதன்பின் அவரது தந்தை, லலிதாவை உடனடியாக ஆதார் மற்றும் பிற அடையாள ஆவணங்களுடன் காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றார். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அப்போது லலிதா பாய் கூறியதாவது, ஷாருக்கான் என்ற நபருடன் விருப்பத்துடன் பன்புராவிற்கு சென்றதாகவும், ஆனால் இரண்டு நாட்களில் அவர் தன்னை மற்றொரு ஷாருக் என்ற நபருக்கு ரூ.5 லட்சத்திற்கு விற்றதாகவும் கூறினார். புதிய நபருடன் கோட்டா நகரில் 18 மாதங்கள் தங்கி இருந்ததும், சில நாட்களுக்கு முன் அவரிடமிருந்து தப்பியதாகவும் தெரிவித்தார். லலிதாவிடம் செல்போன் இல்லாததால் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறினார். தற்போது, விபத்தில் இறந்தவர் யார் என்ற மர்மம் மற்றும் தவறாக சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரின் நிலை குறித்து போலீசார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.