
சென்னை மாவட்டத்தில் உள்ள தி.நகர் பர்க்கிட் சாலையில் எச்.டி.எப்.சி வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு வர்த்தக மற்றும் அந்நிய செலவாணி பிரிவின் மேலாளராக தினேஷ் என்பவர் பணிபுரிந்து வந்தார். இவரை காண இன்று மதியம் 12:40 மணிக்கு மர்ம நபர் ஒருவர் வந்துள்ளார். இந்த நிலையில் அந்த மர்ம நபர் தினேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் கத்தியால் தினேஷை காது, கை, முதுகு என பல இடங்களில் தாறுமாறாக வெட்டி உள்ளார். இதனால் தினேஷ் ரத்த வெள்ளத்தில் அலறியுள்ளார். இதனை கண்ட வங்கி ஊழியர்கள் அதிர்ச்சியில் செய்வதறியாது திகைத்து நின்றனர். பின் அந்த நபரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த மர்ம நபர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணல்மேல்குடி பகுதியில் வசித்து வந்த சதீஷ் என்பவர் தெரியவந்தது. மேலும் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் வங்கி அதிகாரியான தினேஷ், சதீஷ் என்பவரும் சென்னை அண்ணா சாலையில் உள்ள நந்தனம் தனியார் வங்கியில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள் என்பதும். அங்கு சதீஷ் வேலையை சரிவர செய்யாமல் விதியை மீறியதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதும் தெரிய வந்தது. சதீஷ் பணிநீக்கம் செய்வதற்கு முழு காரணமும் தினேஷ் தான் என நினைத்து அவரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இது குறித்து தினேஷ் மீது சதீஷ் காவல்துறையில் ஏற்கனவே வழக்கு பதிவு செய்துள்ளார்.
இந்த நிலையில் தன்னை வேலையில் இருந்து நிறுத்தியதற்கு தினேஷ் காரணம் என்ற முன் பகையோடு சதீஷ் இருந்து வந்துள்ளார். இதனால் தினேஷை பழிவாங்கும் நோக்கத்தோடு சென்ற அவரைத் தாக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த சம்பவம் அரங்கேறி உள்ள வங்கியின் சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் கைப்பற்றினர். மேலும் சதீஷை கைது செய்து அவரிடம் இதுகுறித்து தீவிர விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டும் வருகின்றனர். பட்டப் பகலிலேயே வங்கி ஊழியர் வங்கியில் வைத்து வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.