திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு பணகுடி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் தினந்தோறும் சிகிச்சைக்காக வருகிறார்கள். அந்த மருத்துவமனையில் வள்ளியூரை சேர்ந்த பாலச்சந்தர் என்பவர் மருத்துவராக இருக்கிறார். இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அந்த இளம்பெண்ணிடம் மருத்துவர் பாலச்சந்தர் மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்திய போது அந்த மருத்துவர் இளம்பெண்ணிடம் ஆபாசமாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மருத்துவர் பாலச்சந்தரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.