
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான். இவர் கடந்த 2021-ம் வருடம் அக்டோபர் மாதம் மும்பையில் இருந்து கோவா சென்ற ஒரு சொகுசு கப்பலில் போதை பொருள் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த வருடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது ஆர்யன் கான் உட்பட 5 பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. அதன் பிறகு ஆரியன் கான் வழக்கில் சற்று கூடுதலாக ஆர்வம் காட்டியதாக கூறி போதை பொருள் தடுப்பு பிரிவு இயக்குனர் சமீர் வான்கடே இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு போதைப்பொருள் தடுப்பு பிரிவில் இருந்து மாற்றப்பட்டார்.
இதே போன்று ஆரியன் கானை பிடிப்பதற்காக நடத்தப்பட்ட சோதனையில் இடம் பெற்றிருந்த போலீஸ் அதிகாரி விஷ்வ விஜய் சிங்க் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை டிஸ்மிஸ் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால் இவர் ஆரியன் கான் வழக்கில் டிஸ்மிஸ் செய்யப்படவில்லை எனவும் வேறு ஒரு வழக்கில் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார் எனவும் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.