
சென்னையில் உள்ள கிண்டி சிட்கோ தலைமையகத்தில் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் த.மோ. அன்பரசன் தலைமையில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் போது அமைச்சர் அன்பரசன் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு அதற்கான திட்ட மதிப்பில் உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசின் மானியம் 1.25 லட்சத்திலிருந்து 3.75 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அதன் பிறகு உயர் தொழில் நுட்பம் சார்ந்த நாடா இல்லாத நெய்தலுக்கான கருவிகளை பொருத்த 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இதை பயன்படுத்தி விசைத்தறிக்கூடங்களை நவீனமாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் கிராமப்புற வேலைவாய்ப்பினை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் தென்னை நார் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் போன்ற தொழில்களில் ஈடுபட்டுள்ள MSME நிறுவனங்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு 25 சதவீதம் மானியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.