
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அக்டோபர் 2 ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்திருக்கும் நிலையில் அதிமுக, திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன் பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என கேட்டு அவர் வீடியோவும் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரங்கள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ள நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது நடக்காத விஷயம் என திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கருத்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இன்று சேலத்தில் விசிக கட்சியின் கூட்டம் நடைபெற்றது.
இதில் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று வடிவேலு சொல்கிற மாதிரி நான்தான் அடுத்த முதல்வர் என்று கூறினால் மக்கள் ஏற்க மாட்டார்கள். நம்முடைய செயலும் நம்முடைய களமும் மட்டும்தான் நம்மை அந்த இடத்திற்கு கொண்டு செல்லும். யார் யாரோ முதல்வர் இடத்தில் அமரும்போது திருமாவளவன் ஏன் அமரக்கூடாது என பொதுமக்களும் உழைக்கும் கரங்களும் சொல்ல வேண்டும். மேலும் அப்படி ஆதரவு இருந்தால் மட்டும் தான் முதல்வராக முடியும். நான்தான் அடுத்த முதல்வர் என்று கூறினால் மக்கள் நிச்சயம் ஏற்கமாட்டார்கள் என்று கூறினார்.