பொலிவியா நாட்டில் 30 வயதான ஜெனார்டன் அகோஸ்தா என்பவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனது நான்கு நண்பர்களுடன் சேர்ந்து அமேசான் காட்டிற்கு வேட்டையாடுவதற்காக சென்றுள்ளார். அந்த சமயத்தில் அகோஸ்தா காட்டில் வழி தவறி காணாமல் போயுள்ளார். மேலும் அவர் தனது நண்பர்களுடைய தொடர்பையும் இழந்துள்ளார். இதனால் காணாமல் போனவரிடமிருந்து எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் அவருடைய நண்பர்களும் குடும்பத்தினரும் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் போலீசாரும் மீட்பு குழுவினரும் அமேசான் காட்டில் அவரை வலை வீசி தேடி வந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் அகோஸ்தா மெலிந்த உடலுடன் கடந்த சனிக்கிழமை அன்று மீட்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைக்கு பின்னர் அவர் கூறியுள்ளதாவது “நான் அமேசான் காட்டில் ஒரு மாதமாக உணவு தண்ணீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டேன். அங்குள்ள பூச்சி, புழுக்களை தின்று பசியாற்றிக் கொள்வேன். மேலும் மழை பெய்யும் போது என்னுடைய ஷூ மூலம் தண்ணீர் பிடித்து குடித்தேன்.

அது மட்டுமல்லாமல் தண்ணீர் கிடைக்காத நேரத்தில் சில நேரங்களில் எனது சிறுநீரை குடித்து உயிர் வாழ்ந்தேன். மழை மட்டும் பெய்யாமல் இருந்திருந்தால் நான் உயிர் பிழைத்திருக்க முடியாது” என அவர் கூறியுள்ளார். முன்னதாக அவர் காட்டை விட்டு வெளியேறுவதற்காக சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் நடந்துள்ளார். இதன் காரணமாக அவர் 17 கிலோ எடை குறைந்து மெலிந்து காணப்பட்டுள்ளார். மேலும் அமேசான் மலைக்காடுகளில் சிக்கி கொண்டு நீண்ட நாட்கள் உயிர் பிழைத்த ஒரே நபர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.