உலகின் மிகப்பெரிய இயக்காமர்ஸ் நிறுவனமாக அமேசான் விளங்குகின்றது. இந்த நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டையும் உருவாக்கி வைத்திருக்கின்றது. இந்தியாவின் சிலிக்கான் valley என அழைக்கப்படும் கர்நாடக தலைநகர் பெங்களூருவிலுள்ள உலக வர்த்தக வளாகத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகின்றது. இந்நிலையில் வாடகை காசை மிச்சப்படுத்த தற்போது அமேசான் இந்தியா தலைமையகத்தை பெங்களூரு விமான நிலையம் அருகே புறநகரில் உள்ள சத்துவா டெக் பார்க்கிற்கு மாற்ற உள்ளது. இந்த மாற்றத்தின் மூலம் வாடகை செலவு வெகுவாக குறைக்கலாம் என அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

தற்போது உலக வர்த்தக மையத்தில் 18 மாடிகளில் சுமார் 13 மடியை வாடகைக்கு எடுத்து 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமேசான் தலைமையகம் இயங்கி வருகின்றது. தற்போது மாற்றம் செய்யப்பட உள்ள சத்துவா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட தூரத்தில் உள்ளதோடு இது சுமார் 11,00,000 சதுர அடி பரப்பளவில் 7000 பேர் பணியாற்றும் வகையில் புதிய தலைமையகமாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது உள்ள இடத்தின் வாடகை விகிதம் ஒரு சதுர அடிக்கு ரூபாய் 250 என்று இருக்கும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையே புதிய இடத்திற்கு செலுத்த வேண்டி இருக்கும் இந்த இடமாற்றம் அடுத்த ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.