
சமீபத்தில் டெல்லியில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி, 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதேபோன்று ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த அதிஷி எதிர்க்கட்சி தலைவரானார். இந்நிலையில் டெல்லி சட்டசபையில் சபாநாயகராக பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ விஜேந்தர் குப்தா நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கியது. ஆனால் முதல் நாளிலே ஆளும் கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களும் அவையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல் மந்திரியான அதிஷி கூறியதாவது, டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மற்றும் பகத்சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதைத்தொடர்ந்து அக்கட்சியின் உறுப்பினர்கள் அவையில் எழுந்து கோஷங்களை எழுப்பினர். இதுகுறித்து பாஜக எம்எல்ஏ தர்வீந்தர் சிங் மார்வா கூறியதாவது, அவையில் இருந்து எந்த ஒரு புகைப்படமும் நீக்கப்படவில்லை. கெஜ்ரிவால் மட்டும் தான் பொய் கூறுவார் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் அதிஷி அவரை மிஞ்சிவிட்டார் என்று குற்ற சாட்டினார். இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அவையில் அம்பேத்கர், பகத் சிங் படங்கள் உள்ளன என்று பாஜக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது.