சமீபகாலமாக ஆன்லைன் மோசடிகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. இதனால் 1000 ரூபாயில் தொடங்கி கோடிக்கணக்கில் மக்கள் தங்களது பணத்தை இழந்தும் வருகின்றனர். இந்த நிலையில் டெல்லியில் நடந்த சைபர் முறைகேடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான சுரேஷ் அச்சுதானன் என்பவர் சைபர் க்ரைம் போர்ட்டலில் 43. 5 லட்சம் ரூபாயை தன்னிடம் மோசடி செய்யப்பட்டுள்ளதால் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில் பங்கு சந்தை குறித்து பயிற்சி எடுப்பதாக கூறி வகுப்பில் கலந்து கொள்ள வைத்துள்ளார்கள். பின்னர் முதலீடு செய்வதாக கூறி என்னை ஏமாற்றி பலமுறை ஆன்லைன் மூலம் பணத்தை வாங்கிக் கொண்டனர். நான் அனுப்பிய பணம் பலரின் வங்கி கணக்குகளில் பண பரிமாற்றம் செய்யப்பட்டது.

அந்த வங்கி கணக்குகள் எல்லாமே குற்றவாளிகளுக்கு சொந்தமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்த துவங்கியுள்ளனர். அதில் பல வங்கி கணக்குகளுக்கு பணம் அனுப்பப்பட்டது தெரிய வந்தது. அதில் ஒரு வங்கி கணக்கை ஆய்வு செய்ததில் டெல்லியில் உள்ள வணிக வளாகத்தில் பெயரில் செயல்பட்டது தெரிய வந்தது. மேலும் அதனுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தியதில் மோசடியில் ஈடுபட்ட நபர் சீனாவை சேர்ந்த பங்க் சென்ஜின் என்பது தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் இருந்து ரூபாய் 100 கோடி வரை மோசடி செய்தது அம்பலமானது. அது மட்டுமல்லாது ஆந்திரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அவர் மீது 17 வழக்குகள் உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் அந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.