குமரி மாவட்டத்தில் அருமனை என்ற பகுதியில் யானை மீது பாகன் போதையில் படுத்து தூங்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது திற்பரப்பு என்னும் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக ஒரு யானை இருக்கிறது. இந்நிலையில் நேற்று அந்த யானையை உணவுக்காக பாகன் அண்டுகோடு பகுதிக்கு கொண்டு சென்றார். அதன் பின் மாலையில் வீட்டிற்கு திரும்ப அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது உத்தரங்கோடு என்ற இடத்தில் யானை வந்து கொண்டிருந்த போது அதன் மீது பாகன் தூங்கிய நிலையில் கிடந்தார்.

இதனை கண்டு அச்சமடைந்த அப்பகுதியில் இருந்த மக்கள் பயத்தில் சத்தமிட்டனர். பொது மக்களின் சத்தத்தை கேட்டு அந்த பாகன் எழுந்து யானையை நிறுத்தினார். அப்போது அவர் போதையில் இருந்ததால் தூங்கியது தெரியவந்தது. இந்த தகவல் கலியல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனச்சரக அலுவலர் யானையை பாகனுடன் வனச்சரகத்துக்கு அழைத்து சென்றனர். அதன்பின் பொதுமக்களை பயமுறுத்தும் வகையில் யானையை நடத்தி சென்றதால் பாகன் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் அந்த யானையை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.