ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள அனந்தராக் மாவட்டம் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 வேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை அடுத்து தீ ரெஸிஸ்ட் பிரண்ட் என்ற பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்பு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இச்சம்பவத்தை அடுத்து மத்திய அரசு இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்களை வெளியேற உத்தரவிட்டது.

இச்சம்பவத்திற்கு  பதிலளிக்க பாகிஸ்தான் அரசு கடுமையாக முயற்சித்து வருகிறது. அந்த நாட்டில் உள்ள மக்களிடையே சமூக ஊடகங்களில் கடும் விரக்தி பரவி வருகிறது. இந்நிலையில் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்களை விமர்சிக்கும் மீம்கள் மற்றும்  பதிவுகள் அதிகரித்து வருகின்றன.

இந்த தாக்குதல், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இரு நாடுகளும் விசா சேவைகளை நிறுத்தி, மக்களை வெளியேற்றியுள்ளன.  இதனைதொடர்ந்து  இந்தியா- பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை காரணமாக காட்டி, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தையும் நிறுத்தியுள்ளது.

இந்த சூழலில், பாகிஸ்தானில், மக்கள் சமூக ஊடகங்களில் தங்களது அரசாங்கத்தை கடுமையாக சாடி வருகின்றனர். சிலர் நாட்டு பொருளாதார நிலை மோசமான சூழ்நிலையில், போரை மேற்கொள்வதற்கு பாகிஸ்தானுக்கு எவ்வாறு வசதி செய்ய முடியும் என விமர்சித்து வருகின்றனர்.

ஒரு பயனர், “இந்தியர்கள் போராட விரும்பினால், அதை இரவு 9 மணிக்கு முன் முடிக்க வேண்டும், ஏனெனில் அதற்குப் பிறகு எரிவாயு விநியோகம் நிற்கும்,” என்று கேலியாக  கூறியுள்ளார். மற்றொருவர், “முதலில் மாவு, பிறகு தண்ணீர் பிச்சை, இப்போது எரிவாயு என  எல்லாமே இல்லையா?” என விமர்சித்துள்ளார். மேலும் இந்திய விமானப்படையைக் காட்டும் பதிவுகளுக்கு பதிலாக, பாகிஸ்தானின் விமானப்படையை சாடும் விதமாக, மோட்டார் சைக்கிளில் காகிதத்தால் செய்யப்பட்ட போர் ஜெட் கட்டமைப்பை காட்டும் மீம்களும்  பகிரப்பட்டுள்ளன.

இத்தகைய  சூழலில், பாகிஸ்தான் சர்வதேச அழுத்தத்துடன் மட்டுமல்லாமல், சொந்த குடிமக்களிடமிருந்தும் எழும் கோபத்தையும், கேலிகளையும்  சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது, பாகிஸ்தான் அரசின் குறைந்த நிலைப்பாட்டையும், நாட்டில்  மேலும் தீவிரமாகும் நெருக்கடியையும் வெளிப்படுத்துகிறது.